Text Size

20211106 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.23

6 Nov 2021|Duration: 00:43:51|Tamil|Śrīmad-Bhāgavatam|Śrī Māyāpur, India

மூகம் கரோதி வாஞ்சலம் பங்கும் லங்காயதே கிரிம்
யத்-க்ருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குரும் தீன-தாரணம்
பரமானந்த-மாதவம் ஸ்ரீ சைதன்ய ஈஷ்வரம்
ஹரி: ஓம் தத் ஷத்

 ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய

  ஸ்ரீமத் பாகவதம் 1.12.23

 பிதாமஹ ஸம: ஸாம்யே
ப்ரஸாதே கிரி ஷோபம:
ஆஷ்ரய: ஸர்வ-பூதானாம்
யதா தேவோ ராமாஸ்ரய:

 

மொழிபெயர்ப்பு: இக்குழந்தை சமத்துவமான மனநிலையில் பாட்டனார்  யுதிஷ்டிரரைப் போல் அல்லது பிரம்மாவைப் போல் இருப்பார். அவர் கைலாச பதியான சிவபெருமானப் போல் உதாரகுணம் உள்ளவராக இருப்பார். மேலும் லக்ஷ்மி தேவிக்கும் புகலிடமாக உள்ள பரம புருஷரான நாராயணரைப் போல், இவர் அனைவருக்கும் புகலிடமாக இருப்பார்.

 ஸ்ரீல பிரபுபாதருடைய பொருளுரை : சமத்துவமான மனநிலை என்பது, யுதிஷ்டிர மகாராஜன் மற்றும் எல்லா ஜீவராசிகளுக்கும் பாட்டனாராகிய பிரம்மா ஆகிய இருவரையும் குறிக்கும். ஸ்ரீதர சுவாமியின் கருத்துப்படி, பாட்டனார் என்பது  பிரம்மாவைக் குறிப்பிடுவதாகும். ஆனால் விஸ்வநாத சக்ரவர்த்தியின் கருத்துப்படி பாட்டனார் என்பது யுதிஷ்டிர மகாராஜனையேக் குறிப்பதாகும். ஆனால் இரு விஷயங்களிலும் உவமை பொருத்தமாகவே உள்ளது, ஏனெனில் அவர்கள் இருவருமே பகவானின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளாவர். இவ்வாறாக அவர்கள் இருவரும் ஜீவராசிகளின் பொதுநலச் சேவையில் ஈடுபட்டிருப்பதால், அவர்கள் சமத்துவ மனநிலையைக் கொண்டவர்களாகத்தான் இருக்கவேண்டும். உயர்ந்த நிர்வாகப் பொறுப்பிலுள்ள எவரும் யாருக்காக அவர் உழைக்கிறாரோ அவர்களிடமிருந்தே வரும் பலமான தாக்குதல்களை பொறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. மிக உயர்ந்த பூரணத்துவ நிலையை அடைந்த பகவத் பக்தர்களான கோபியர்களும் பிரம்ம தேவரை நிந்தித்தனர். இக்குறிப்பிட்ட பிரபஞ்சத்தை சிருஷ்டித்தவரான பிரம்மதேவர், பகவானைக் காண்பதற்கு இடையூறாக இருக்கும் கண்ணிமைகளைப் படைத்ததற்காக கோபியர்கள் அவரது படைப்பில் அதிருப்தியடைந்தனர். நொடி நேர கண் சிமிட்டல்களையும் அவர்களால் சகித்துக் கொள்ள இயலவில்லை. ஏனெனில் அவர்களது அன்பிற்குரியவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைக் காண்பதற்கு அது தடையாக இருந்தது. ஆகவே பொறுப்புமிக்கவர்களின் ஒவ்வொரு செயலிலும் இயல்பாகவே குற்றம் கண்டுபிடிப்பவர்களான மற்றவர்களைப் பற்றி கூறத்தேவையில்லை. இதைப்போலவே, எதிரிகளால் உருவாக்கப்பட்ட பல கடினமான சூழ்நிலைகளை யுதிஷ்டிர மகாராஜன் கடக்க வேண்டியிருந்தது. மேலும் எல்லா அசாதகமான சூழ்நிலைகளிலும் சமத்துவமான மனநிலையை பூரணமாக காக்கக்கூடியவர் என்பதையும் அவர் நிரூபித்தார். எனவே சமத்துவமான மனநிலையைப் பராமரிப்பதில் இவ்விரு பாட்டனார்களைப் பற்றிய உதாரணம் மிகவும் பொருத்தமானதாகும்.

பிச்சைக்காரர்களுக்கு பரிசுகளை அளிப்பவரான சிவபெருமான் ஒரு புகழ்பெற்ற தேவராவார். எனவே அவருக்கு “ஆஸுதோஷ்” அதாவது மிகச்சுலபமாக திருப்திபடக்கூடியவர் என்ற பெயரும் உண்டு. அவருக்கு பூதநாத அதாவது இழிவடைந்த மக்களின் தலைவர் என்ற பெயரும் உண்டு. சிவபெருமான் பின்விளைவுகளை எண்ணிப் பார்க்காமலேயே மிகத்தாராளமாக பரிசுகளை அளிப்பதால்தான் அவரிடம் சாதாரண மக்கள் பற்றுக்கொள்கின்றனர். இராவணன் சிவபெருமானிடம் மிகவும் பற்றுக்கொண்டிருந்தான். அவரைச் சுலபமாக திருப்திபடுத்திய இராவணன் பெரும்சக்தி படைத்தவனாக மாறினான். இதனால் பகவான் ஸ்ரீ ராமரின் அதிகாரத்தையும் அவன் எதிர்க்கத் துணிந்தான். ஆனால் சிவபெருமானின் இறைவனும், பரம புருஷ பகவானுமாகிய ஸ்ரீ ராமருடன் அவன் போரிட்டபொழுது, சிவபெருமான் அவனுக்கு உதவவில்லை. விருகாசுரனுக்கு சிவபெருமான் அளித்த வரம் அபாயகரமானது மட்டுமல்லாமல், தொந்தரவு செய்யக்கூடியதுமாகும். யாருடைய தலையைத் தொட்டாலும் அது உடனே வெடித்துவிடும் வரத்தை சிவபெருமான் அவனுக்கு அளித்திருந்தார். சிவபெருமான் அளித்த இந்த வரத்தை அவர் மீதே பரீட்சித்துப் பார்க்க அந்த வஞ்சகன் விரும்பினான். இத்தொல்லைகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. இதிலுள்ள உயர்ந்த கருத்து என்னவென்றால், சிவபெருமான் யாருக்கும் எந்த வரத்தையும் கொடுக்கத் தயங்குவதில்லை. எனவே, சில சமயங்களில் சில தவறுகளை அவர் செய்துவிட நேர்ந்தாலும், அவர் மிகவும் தாராள மனமுடையவராவார்.

 “ரமா” என்பது லக்ஷ்மியைக் குறிப்பதாகும். லக்ஷ்மியின் புலிடம் பகவான் விஷ்ணுவேயாவார். அனைத்து ஜீவராசிகளையும் காப்பவர் பகவான் விஷ்ணுவேயாவார். இவ்வுலகில் மட்டுமில்லாமல், மற்றெல்லா நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கிரகங்களிலும் கூட எண்ணற்ற ஜீவராசிகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தன்னுணர்வை அடைவதற்கான எல்லா வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் புலன் நுகர்வுப்பாதையில் ஈடுபடும் இவர்கள் பொருளாதார முன்னேற்றத்தை குறிக்கோளாகக் கொண்டு பல கஷ்டங்களுக்கு உள்ளாகின்றனர். இத்தகைய பொருளாதார முன்னேற்றம் மாயையானது என்பதால் ஒருபோதும் வெற்றியளிக்காது. இவர்கள் எப்பொழுதும் மாயாதேவியான லக்ஷ்மியின் கருணைக்காக ஏங்கித்தவிக்கின்றனர். ஆனால் லக்ஷ்மி தேவியால் விஷ்ணுவின் பாதுகாப்பின் கீழ் மட்டுமே வாழமுடியும் என்பதை அவர்கள் அறியவில்லை. விஷ்ணு இல்லாமல் லக்ஷ்மி ஒரு மாயையாக மட்டுமே இருப்பாள். எனவே நேரடியாக லக்ஷ்மியிடம் புகலிடம் கொள்ள முயற்சிப்பதற்கு பதிலாக நாம் விஷ்ணுவிடம் புகலிடம் கொள்ளவேண்டும். விஷ்ணுவால் அல்லது அவரது பக்தர்களால் மட்டுமே எல்லோருக்கும் பாதுகாப்பு அளிக்க இயலும். மேலும் பரீட்சித்து மகாராஜன் விஷ்ணுவால் நேரடியாக பாதுகாக்கப்பட்டவர் என்பதால், அவரது ஆட்சியின் கீழ் வாழ விரும்பும் அனைவருக்கும் பூரணமான பாதுகாப்பை வழங்குவது அவருக்குச் சாத்தியமாகும்.

ஜெயபதாக சுவாமி: இவ்வாறாக நீண்ட காலமாக யுதிஷ்டிர மகாராஜர் வருங்கால அரசரைப் பற்றி அறிய ஆவல் கொண்டிருந்ததை நாம் காண்கிறோம். கடந்த வாரம்கூட, அவர்கள் ஜோதிடர்களிடம் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார்கள் என நினைக்கிறேன். தற்போது கூட அவர் ஆராய்ந்து கொண்டுள்ளார்.  இவ்வாறாக, அவர் பரீக்ஷித் மகாராஜா எப்படி இருப்பார், அவர் எத்தகைய  குணங்களைக் கொண்டிருப்பார், அவரால் வம்சத்தின் கௌரவத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா? என்று எண்ணியவாறு கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். கொடுக்கப்பட்டுள்ள அனைத்து எடுத்துக்காட்டுகளும், தெய்வீகமானவையும், மதிப்பிடற்கரியதுமாகும். இக்குழந்தை சமத்துவமான மனநிலையில் பாட்டனார்  யுதிஷ்டிரரைப் போல் அல்லது பிரம்மாவைப் போல் இருப்பாரா, அவர் கைலாச பதியான சிவபெருமானப் போல் உதாரகுணம் உள்ளவராக இருப்பாரா, மேலும் லக்ஷ்மி தேவிக்கும் புகலிடமாக உள்ள பரம புருஷரான நாராயணரைப் போல், இவர் அனைவருக்கும் புகலிடமாக இருப்பாரா என்பது போன்றதான உதாரணங்கள் மிக மிக அற்புதம்.

இன்று வாசு கோஷருடைய மறைவுநாள். அவர் மிகவும் சிறப்பு வாய்ந்த பக்தராவார். மூன்று சகோதரர்களான அவர்கள் அனைவரும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தூய பக்தர்களாவர். கோவிந்த கோஷ், மாதவ கோஷ் மற்றும் வாசு கோஷ். வாசு கோஷ் எழுதிய பாடலில், பகவான் ஸ்ரீ சைதன்யர் இல்லையென்றால் அங்கு என்ன இருக்கப் போகின்றது என்று பாடியுள்ளார். இந்த பாடலே யதி பிரபுபாதா நா ஹோய்தோ தபே கி ஹோய்தோ – பிரபுபாதர் இல்லையென்றால் அங்கு என்ன இருக்கப்போகின்றது என்ற பாடலை எழுதுவதற்கு என்னைத் தூண்டியது. வாசு கோஷ் விக்ரஹத்தின் முன்னர் தனது சமாதிக்கான குழியைத் தோண்டி, அதற்குள் அமர்ந்துகொண்டு, என்னை உயிருடன் மண்ணில் புதைத்துவிடுங்கள் என்று தனது சீடர்களிடம் கூறினார்.  அதற்கு பதிலளிக்கும் விதமாக விக்ரஹம் பேசியது,  "உனது உடலை எனக்குக் கொடுத்துவிட்டாய், எனவே தற்கொலை செய்துகொள்வதற்கு உனக்கு உரிமையில்லை!" விக்ரஹமே அவரிடம் பேசும் அளவிற்கு அவர் எவ்வளவு பக்குவமாக இருந்துள்ளார்! ஆனால் பகவான் ஸ்ரீ சைதன்யர் மறைந்தபிறகு அவர் சொல்லொணா பிரிவு வேதனையை அனுபவித்தார். இவ்வாறாக, இன்று அவருடைய மறைவுநாள் என்பதால் அவருக்கு நமது மரியாதை கலந்த வணக்கங்களை சமர்ப்பிப்போமாக.

யுதிஷ்டிர மகாராஜாவுக்கு குழந்தையின் எதிர்கால குணநலன்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது என்பதை நாம் காண்கிறோம். அது போல, கிருஹஸ்தர்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது கிருஹஸ்த வாழ்வின் முக்கிய அம்சமாகும். ஆறு கோஸ்வாமிகளில் ஒருவரான கோபால பட்ட கோஸ்வாமி ஸத்-க்ரியா-சார-தீபிகா என்ற நூலை எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில், கர்ப்பதான-ஸம்ஸ்காரமும் உள்ளடக்கமாகும். அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆறு கோஸ்வாமிகளில் ஒருவரான ஒரு பாபாஜி, ஒரு பரமஹம்சர், இதனை தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். எனவேதான் ஸ்ரீல பிரபுபாதரும், கிருஹஸ்தர்கள் கூடுதல் சுற்றுகளை ஜபித்து, பகவானிடம் பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும் என்று கூறினார். உறவு கொள்வது குறுகிய காலம் மட்டுமே. ஆனால் ஒருவருடைய உணர்வே குழந்தையை உருவாக்குகிறது. எனவே, இது எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் காணலாம். உறவுகொள்வது சில நிமிடம்தான் ஆனால் குழந்தையோ வாழ்நாள் முழுவதும் உள்ளது. எனவே, யுதிஷ்டிரர் குழந்தை எப்படி செயல்படப் போகிறான் என்பதை அறிய விரும்புவதைப் போலவே, கிருஹஸ்தர்களாகிய நாமும் மகனோ அல்லது மகளோ குழந்தை கிருஷ்ண உணர்வுடன் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமாக  வாழ வேண்டும் என்பது குறித்து சற்றாவது சிந்தித்தாக வேண்டும்.

நேற்று கோவர்த்தன பூஜை சிறப்புடன் நடைபெற்றது. கோவர்த்தன-பூஜை மிகவும் விஷேசமான திருவிழாவாகும். இந்த கோவர்த்தன பூஜையில் பல விஷயங்கள் அரங்கேறியுள்ளன. அதாவது, ஒரு கோவர்த்தன-பூஜையின்போது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, பிரசாதம் விநியோகிக்கப்பட்டதும் ஸ்ரீல பிரபுபாதர் ஏதோ சத்தம் கேட்டு, என்ன நடந்தது என்பதை அறிய விரும்பினார். அப்போது இங்கு லோட்டஸ் பில்டிங் மட்டுமே இருந்ததால் லோட்டஸ் பில்டிங்கின் வராண்டாவிற்குச் சென்று சத்தம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தார். மக்கள் சாப்பிட்டபின் வீசப்பட்டிருந்த வாழை இலைகள் பெரிய மலைக்குவியலாக  இருந்தது. பொதுவாக மக்கள் பிரசாதம் முழுவதையும் சாப்பிட்டுவிடுவர், சிலரே அதனை மிச்சம் வைத்திருப்பர். அந்த மிச்சத்தை அங்குள்ள சில கிராமத்துப் பிள்ளைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் நாய்களும் அதை சாப்பிட விரும்பின. பசியின் காரணமாக நாய்களும் லொள் லொள் என்று குரைத்துக் கொண்டிருந்தன. சிறுவர்கள் கிராமத்துக் குச்சிகளைக் கொண்டு நாய்களை விரட்டியடித்துக் கொண்டிருந்தனர். ஒருபுறம் குச்சியைக் கொண்டு விரட்டியடித்து நாய்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர், மறுபுறம் மக்களின் எச்சங்களைத் தின்று கொண்டிருந்தனர். ஸ்ரீல பிரபுபாதர் இந்தக் காட்சியைக் கண்டு அழத் தொடங்கினார், “அவர்கள் எவ்வளவு பசியுடன் இருந்திருக்க வேண்டும்! அகோர  பசி! கிருஷ்ணரே பரம தந்தையாவார். மேலும், தந்தையின் முன்னிலையில், குழந்தைகள் பசியுடன் இருக்கக்கூடாது” என்றார். அதனையடுத்து ஸ்ரீல பிரபுபாதர், “நமது ஆலயத்தின் 10 மைல் சுற்றளவில் உள்ள எவரும் பசியுடன் இருக்கக்கூடாது. கிருஷ்ணரே பரம தந்தை என்பதால் அனைவருக்கும் உணவளிக்க வேண்டும்” என்றார். அன்று முதல் வாரத்திற்கு இரண்டு நாட்கள் வருபவர்கள் அனைவருக்கும் இலவச உணவு வழங்க ஆரம்பித்தோம். ஜாதி, மதம், பிறப்பு என்ற எவ்விதமான வேறுபாடுமின்றி அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனையே நாம் தொடர்ந்து கொண்டுள்ளோம். அது கோவர்த்தன பூஜை நன்னாளில்தான் அரங்கேறியது.

1977ல் விருந்தாவனத்தில் நடந்த மற்றுமொரு விஷயம் எனக்கு நினைவிருக்கிறது. கோவர்த்தன பூஜை இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெறவிருந்தது. ஸ்ரீல பிரபுபாதர் கூறினார், என்னை காளை வண்டியில் ஏற்றி கோவர்த்தனத்தைச் சுற்றி வர அழைத்துச் செல்லுங்கள் என்றார். ஆனால், ஸ்ரீல பிரபுபாதரின் மருத்துவரான  கவிராஜர், இவ்வாறு செய்தால் ஸ்ரீல பிரபுபாதர் பிழைக்க மாட்டார் என்று கூறிவிட்டார். அதற்கு ஸ்ரீல பிரபுபாதர் நானோ ஒரு பிரச்சாரகன், எனவே பிரச்சாரம் செய்துகொண்டே இறப்பது எனக்கு மேலானதே என்றார். எனவே சில பக்தர்கள் ஸ்ரீல பிரபுபாதரை பரிக்ரமாவிற்கு அழைத்துச் செல்ல தயாராக இருந்தனர். இருப்பினும் ஸ்ரீல பிரபுபாதருடைய உடல்நிலை சற்றே தேறி வருவதால், இச்சமயத்தில் அத்தகைய தீவிர நடவடிக்கை வேண்டியதில்லை என்று நாங்கள் கவலைப்பட்டோம். எனவே, சில சீடர்கள் அழுதுகொண்டே ஸ்ரீல பிரபுபாதரிடம்,  தயவுசெய்து போகவேண்டாம்! என்றனர். மற்றும் சிலர் ஸ்ரீல பிரபுபாதரை  கோவர்த்தன பரிக்ரமாவிற்கு அழைத்துச் செல்ல தயாராக இருந்தனர். அச்சமயத்தில் கிருஷ்ணதாஸ பாபாஜி, அவருடைய ஆன்மீக சகோதரர் அங்கே இருந்தார். ஸ்ரீல பிரபுபாதர் அவரிடம், “எனது சீடர்கள் என்மீது எவ்வளவு அன்புகொண்டுள்ளனர் என்பதைப் பாருங்கள்!” என்றார். இதுவும் கோவர்த்தன பூஜைக்கு சற்று முன்பு நடந்தது.

நான் நேற்று பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற கண்டுகளித்தேன். ஆலயங்கள் மட்டுமின்றி, கோவர்த்தன பூஜை நடைபெற்ற பல கிருஹஸ்தர்கள் இல்லங்களுக்கும் சென்று வந்தேன். நிச்சயமாக, இது தன்னிகரற்ற தரிசனமாகும்.  எனவே வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு விதத்தில் அழகழகாக கோவர்த்தன மலையை உருவாக்கியிருப்பதை கண்டுகளித்தோம். விசாகப்பட்டினத்தில் பக்தர்கள் பசுவின் சாணத்தால் ஒரு கிருஷ்ணரை உருவாக்கியிருந்தனர். அவர் கோவர்த்தன மலையைத் தாங்கிக் கொண்டிருந்தார். மேலும் அங்கு கிருஹஸ்தர்கள் பலரும் போகா தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தனர். சில இடங்களில் 56 போகா நைவேத்தியம், சில இடங்களில் 108, மற்றும் சில இடங்களில் ஆயிரத்திற்கும் மேலாக!

மாயாபுர் தாமத்தில் மிகப்பெரிய அன்னகூடம் நடைபெற்றது. மாயாபுர் தாமத்தின்  மிகப்பெரிய அன்னகூடத்தைப் போல் நான் வேறு எங்கும் காணவில்லை. அதில் அனைவரும் பங்குகொண்டனர், சிலர் முழு விருந்தாவனத்தையும், முழு கோவர்த்தனத்தையும் செய்தனர். கோவர்த்தனத்தின் ஒரு பக்கத்தில் ராதா குண்டம்,  ஸ்யாம குண்டம், மறுபக்கம் மானஸீ கங்கா. சிலர் குரங்குகளையும் மாடுகளையும் வைத்தனர். சில இடங்களில் அவர்கள் கிருஷ்ண லீலை நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருப்பதாகவே எண்ணினேன். இவ்வாறாக அவர்கள் பக்தித் தொண்டின்  பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். சில இடங்களில் கீர்த்தனைகள், நாடகங்கள் மற்றும் பகவானின் பெருமைகள் அரங்கேறிக் கொண்டிருந்தன. கோவர்த்தனத்தில் கிருஷ்ண லீலையை ஸ்மரணம் செய்து கொண்டிருந்தனர். பாத-ஸேவனம் மற்றும் அர்ச்சனம் உடன் அவர்கள் கோவர்த்தன விக்ரஹத்தை பூஜித்துக் கொண்டிருந்தனர். கோவர்த்தனத்தை வலம் வந்து வணங்கி, வந்தனம் செய்தனர். இவ்வாறாக, கோவர்த்தன பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டதைக் கண்டேன். விருந்தாவனம் போன்றதான சில இடங்களில் பிரம்மாண்டமாகவும், சில இடங்களில் மிக எளிமையாகவும் நடைபெற்றது. ஆனால் அனைத்து இடங்களிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறாக அனைத்து பக்தர்களும் பங்குகொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். பங்களாதேஷ், மலேசியா, ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளிலும் பக்தர்கள் கோவர்த்தன பூஜையில் கலந்துகொண்டதைக் கண்டோம். வார நாள் என்பதால் சிலர் மாலையிலும் சிலர் காலையிலும் அனுசரித்தனர். சிலர் சாதத்தில் மலையை உருவாக்கியிருந்தனர், சிலர் அல்வா மலை செய்திருந்தனர்.  ஹல்வாகூடம்! இவ்வாறாக, மக்களிடம் பக்தி சேவை பரவசநிலையில்  இருப்பதைக் காண்கிறோம். பௌதிக உலகில் நமக்கு கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என உள்ளது. ஆனால் ஆன்மீக உலகில் நமக்கு அது இல்லை. நித்ய-வர்தமாண, நித்தியமாக இருக்கின்றது. யாரும் முதுமை அடைவதில்லை, நோயால் பாதிக்கப்படுவதில்லை, இறப்பதில்லை. இவ்வாறாக, கோவர்த்தன பூஜையைப் போன்று, நாம் கிருஷ்ண உணர்வில் முழுமையாக மூழ்கி, சேவையில் ஈடுபட்டால், நம் வாழ்வின் முடிவில் நாம் மீண்டும் கடவுளிடம் திரும்பிச்  செல்வோம்.

யுதிஷ்டிர மகாராஜர் குழந்தை எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டிருக்கும்  என்பதை அறிய விரும்பினார். எனவே, இதுபோன்றதான வழியில், கிருஷ்ண உணர்வில் மகிழ்ச்சியாக இருக்க இயன்றவரை நம் குழந்தைகளைப் பயிற்றுவிக்க முயற்சிக்க வேண்டும். சிலர் குழந்தைகளை விரும்புகிறார்கள் ஆனால் அவர்களுக்கு குழந்தை இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்கள மற்றவர்களுக்கு கிருஷ்ண உணர்வைக் கொடுக்க முயற்சிக்க வேண்டும். சில கிருஹஸ்தர்கள்  குழந்தைகளை விரும்புவதில்லை, ஆனால் அவர்களுக்கு குழந்தைகள் இருக்கிறது.  அத்தகையவர்கள் தங்கள் குழந்தைகளை சரியாக பராமரிப்பதில்லை. இதன் காரணமாகவே அத்தகைய குழந்தைகள் வர்ண-ஸங்கர என்று அழைக்கப்படுகிறார்கள். யுதிஷ்டிர மஹாராஜா தனது பேரனைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பியதைப் போலவே, பக்தர்களாகிய நாமும் நம் குழந்தைகளின் எதிர்காலத்தில் அக்கறை கொள்ள வேண்டும். ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு  ஒரு கிராமமே தேவைப்படுகின்றது என்று யாரோ ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.  எனவே, குழந்தைகள் கிருஷ்ண உணர்வில் இருக்க உதவுவதில் நாம் அனைவருமாக பங்குகொள்ளவேண்டும். நான் இத்துடன் வகுப்பை நிறைவுசெய்கிறேன். புனிதமான இந்த தாமோதர மாதத்தில், உள்ளூர் ஆலயங்களிலும், ஸ்ரீதாம் மாயாபுரிலும் விளக்குகளை தானம்  செய்வதற்கான இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்வர்  என்று நம்புகிறேன். அனைவருமே பகவத் கீதையை விநியோகிக்க முயற்சிப்பார்கள் என்றும் நம்புகிறோம், இதன்மூலமாக அனைவருமே தங்களுக்கான ஸம்பந்த, அபிதேய மற்றும் பிரயோஜனத்தைப் புரிந்துகொள்வார்கள். ஓம் தத் ஸத்!

ஏதேனும் கேள்விகள் இருந்தால், அதில் இரண்டு அல்லது மூன்று கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு, ZOOM தரிசனத்திற்கு செல்வோம்.

சுபாஹு ஸாக்ஷி சுதா தாஸர்[வங்காளம்]: ஆன்மீக குருவின் மனக்குறிப்பு மற்றும் மனோபாவத்தை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது. 1977-ல் ஸ்ரீல பிரபுபாதருடைய விஷயத்தில், அவர் சற்று தேறியிருந்த சமயத்தில், கோவர்த்தன பரிக்ரமா செல்ல விரும்பினார், ஆனால் அவரது சீடர்களில் பலரும் ஸ்ரீல பிரபுபாதரின் மீதுள்ள அன்பின் காரணமாக அவர் செல்வதை விரும்பவில்லை. இத்தகைய சூழலை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மேலும் கௌர கிஷோர தாஸ பாபாஜியின் விஷயத்திலும் நாம் பார்க்கிறோம், அவர் தான் மறைந்தபிறகு தனது உடலை நவத்வீபத்தின் தெருக்களில் இழுத்துச் செல்லவேண்டுமென விரும்பினார், ஆனால் ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் அதனை மேற்கொள்வதற்கு அனுமதிக்கவில்லை. இவ்வாறாக ஆன்மீக குருவின் மனக்குறிப்பு மற்றும் மனோபாவத்தை நம்மால் எப்படி புரிந்து கொள்ளமுடியும்?

ஜெயபதாக சுவாமி: ஆன்மீக குருவானவர் கிருஷ்ணரின் கருணையைப் பெற்ற சிறப்பு வாய்ந்த பக்தர் என்பதால், ஆன்மீக குருவின் உடலைக் கயிற்றால் கட்டி இழுப்பது என்பது முறையானதல்ல. இவ்வாறாக ஸ்ரீல பிரபுபாதரும் தான் ஒரு பிரச்சாரகர் என்பதால் பிரச்சாரம் செய்ய விரும்பினார். ஆனால், கோவர்த்தன மலை பரிக்ரமாவிற்கு மாட்டு வண்டியில் அழைத்துச் சென்றால் அவர் உயிர் பிழைப்பது சிரமம் என்று அவரது மருத்துவர் கூறினார். இவ்வாறாக ஸ்ரீல பிரபுபாதர் உயிர் துறப்பதை அவரது சீடர்கள் பலரால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. எனவே, தயவு செய்து இதனைக் கைவிடுமாறு ஸ்ரீல பிரபுபாதரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டனர். ஆனால் ஸ்ரீல பிரபுபாதரோ தான் சென்றேயாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் நாங்களோ அவர் போகக் கூடாது என்று அழுது கொண்டிருந்தோம். அவர் குணமடைந்து விடுவார் என்று நம்பினோம். இவ்வாறாக,  ஒருபக்கம் ஆன்மீக குருவின் உணர்வு, மற்றொரு பக்கத்தில் பக்தர்களின் உணர்வு.

ரங்கவளீ: அசைவ உணவுடன் பிரசாதம் எடுத்துக் கொண்டால், அது  ஏற்றுக்கொள்ளக் கூடியதா அல்லது பாவமா?

ஜெயபதாக சுவாமி: பிரசாதம் சாப்பிடுவது ஏற்புடையது. அசைவம் சாப்பிடுவது பாவகரமானது.

பக்தி அத்வைத நவத்வீப ஸ்வாமி: எல்லா பக்தர்களுமே கோவர்த்தன மலையை உருவாக்கியுள்ளனர், இதில் உங்களுக்கு விருப்பமில்லை என்று நாங்கள் கேள்விப்பட்டதால், நாங்கள் அதனை செய்யவில்லை, ஆனால் மற்ற எல்லா கோயில்களும் நடைபெற்றுள்ளன. குரு மஹாராஜ் தாங்களை எங்களுக்கு வழிகாட்டவேண்டும்.

ஜெயபதாகா ஸ்வாமி: கோவர்த்தன-பூஜையின் பெயர்களில் ஒன்று அன்னகூடா. இவ்வாறாக சாதத்தில் கோவர்த்தன மலையை உருவாக்குகிறோம். கோவர்த்தன மலையானது கிருஷ்ணரே. அதனால் தான் நாம் கண்கள், மூக்கு, புன்னகைக்கும்  வாய் ஆகியவற்றை வைக்கிறோம். இதில் என்ன பிரச்சனை உள்ளது? கோவர்த்தன மலையை கிருஷ்ணராகக் கருதியதால்தான் பகவான் ஸ்ரீ சைதன்யர் கோவர்த்தன மலைமீது நடந்து செல்லவில்லை. எனவே, அத்தகைய கோவர்த்தன மலைக்கு பக்தியுடன் தொண்டாற்றவேண்டும், அதுவே பாராட்டிற்குரியதாகும்.

வங்காள பக்தர்: நாம் இறைவனுக்கு போகா கொடுக்கும்போது, நமது மனநிலை எப்படி இருக்க வேண்டும்? நாம் எவ்வாறு பிரார்த்திக் கொள்ளவேண்டும்?

ஜெயபதாகா ஸ்வாமி: அது இறைவனுக்கு ஏற்புடையதாக இருக்கவேண்டும்.  பகவானை திருப்திபடுத்த விரும்பவேண்டும். அத்துடன் போகா பிரார்த்தனை மந்திரங்களால் பிரார்த்திக்க வேண்டும்.

இப்போது நாம் கேள்விகளை முடித்துக்கொண்டு, முதலில் மாயாபுர் பக்தர்களைப் பார்ப்போம், அதனையடுத்து ஆலயத்தையும்  கிழக்கு தேசத்து பக்தர்களையும் பார்ப்போம்.

- END OF TRANSCRIPTION -
Transcribed by கந்தர்விகா மோகினி தேவி தாசி
Verifyed by
Reviewed by

Lecture Suggetions