Text Size

20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36

20 Nov 2021|Duration: 01:45:20|Tamil|Śrīmad-Bhāgavatam|Śrī Māyāpur, India

மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்காயதே கிரிம்
யத்-கிருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குரும் தீன-தாரணம்
ஹரி: ஓம் தத் ஸத்

 ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய

 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35

 ஆஹுதோ பகவான் ராஜ்னா
யாஜயித்வா த்விஜைர் ந்ருபம்
உவாஸ கதிசின் மாஸான்
ஸுஹ்ருதாம் ப்ரிய – காம்யயா

மொழிபெயர்ப்பு: யுதிஷ்டிர மஹாராஜனால் அழைக்கப்பட்டிருந்த பரம புருஷரான  ஸ்ரீ கிருஷ்ணர், அவை தகுதியுள்ள [இருபிறப்பெய்திய] பிராமணர்களால் நடத்தப்படுகின்றனவா என்பதை கவனித்துக் கொண்டார். அதன் பிறகு, உறவினர்களின் மகிழ்ச்சிக்காக, பகவான் சில மாதங்கள் அங்கு தங்கினார்.

ஸ்ரீல பிரபுபாதருடைய பொருளுரை: யாகத்தைக் கண்காணிப்பதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் யுதிஷ்டிர மஹாராஜரால் அழைக்கப்பட்டிருந்தார். பகவானும் அரசரின் உத்தரவுப்படி, இருபிறப்பெய்திய கற்றறிந்த பிராமணர்களைக் கொண்டு யாகத்தை நடத்திவைத்தார். பிராமண குடும்பத்தில் பிறப்பதாலேயே ஒருவன் யாகம் செய்யும் தகுதியைப் பெற்றுவிடுவதில்லை. ஒருவன் தகுதியுள்ள ஆச்சாரியரிடமிருந்து முறையான பயிற்சியையும், தீட்சையையும் பெற்ற இருபிறப்பு எய்தியவனாக இருக்கவேண்டும். பிராமண குடும்பங்களில் பிறந்த “பிரம்ம பந்துக்களை” அல்லது ஒருமுறை பிறந்த தகுதியற்ற வம்சத்தினரை வேத அல்லது சமயச்சடங்குகளை செய்வதிலிருந்து விலக்கிவிட வேண்டும். இதைக்கண்காணிக்கும் பொறுப்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் ஒப்படைக்கப்பட்டது. பூரண புருஷராகிய பகவானும், தகுதியுள்ள இருபிறப்பெய்திய பிராமணர்களைக் கொண்டு யாகத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினார்.

 ஸ்ரீமத் பாகவதம் 1.12.36

 ததோ ராஜ்னாப்யனுஞ்னாத:
கிருஷ்ணயா ஸஹ-பந்துபி:
யயௌ த்வாரவதீம் ப்ரஹ்மன்
ஸார்ஜீனோ யதுபிர் வ்ருத:

மொழிபெயர்ப்பு:  சௌனகரே, அதன்பிறகு, யுதிஷ்டிர மஹாராஜன், திரௌபதி மற்றும் பிற உறவினர்கள் ஆகியோரிடமிருந்து விடைபெற்றுக் கொண்ட பகவான், அர்ஜுனனாலும், யது வம்சத்தின் மற்ற அங்கத்தினர்களாலும் சூழப்பட்டவராக  துவாரகா புரியை நோக்கிக் கிளம்பினார்.

 ஸ்ரீமத் பாகவதம்,  முதல் காண்டத்தின், “பரீட்சித்து மஹாராஜனின்  பிறப்புஎனும் தலைப்பைக் கொண்ட பக்திவேதாந்த பொருளுரைகள் நிறைவு பெறுகின்றன.

ஜெயபதாகா ஸ்வாமி: ஸ்ரீமத் பாகவதத்தின் இந்த முதல் காண்டத்தில், பகவான் கிருஷ்ணர் எப்படி அறிமுகப்படுத்தப்படுகிறார் என்பதைக் காண்கிறோம். யுதிஷ்டிரர் கிருஷ்ணருடன் பழைய நண்பராக தொடர்புகொண்டிருந்தார். எனவே, அவர் கிருஷ்ணரை யாகச்செயல்களுக்காக தங்கும்படி கேட்டுக் கொண்டார். இவ்வாறாக, கிருஷ்ணர் பரம புருஷ பகவானாக இருந்தபோதிலும், அவர் ஒரு மனிதனைப் போன்றே செயல்படுகிறார். அவரே முழு உலகிற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளார். எனவே அவர் பிராமணர்கள் யாகங்களைச் சரியாகச் செய்கின்றனரா என்கின்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டார், இதன் மூலமாக அவர் அங்கு தங்கியிருப்பதற்கான வாய்ப்பையும் பயன்படுத்திக்கொண்டார். எனவே பிராமணர்களின் குடும்பத்தில் பிறப்பதால் மட்டுமே போதுமான தகுதிகளைப் பெற்றுவிட முடியாது என்பதை நாம் இங்கு பார்க்கிறோம். அத்தகையவர்கள் பிரம்மபந்துக்கள் – பிராமண தகுதியின்றி பிறந்தவர்கள் - என்று அழைக்கப்படுகின்றனர். வங்காளத்தில் காணப்படுவதைப் போல, இந்தியாவில்  நம்பர் 1 என்று கேள்விப்படுகிறோம், அது என்ன நம்பர் 1 ? அவர்களில்  பெரும்பாலானோர் அதாவது 98%. அசைவ உணவை ஏற்பதில் நம்பர் 1 ஆக இருக்கின்றனர், குஜராத்தில் 40% அசைவர்களாக இருக்கின்றனர், இவ்வாறாக  வங்காளத்தில் 2% மட்டுமே சைவ உணவை ஏற்பவர்களாக இருக்கின்றனர்.  எனவே வங்காளத்தில் உள்ள, பானர்ஜிகள், முகர்ஜிகள், பந்தோபாத்யாயா, போன்றவர்களில் சுத்த சைவ உணவு உண்பவர்களைக் கண்டறிவது கடினமே.   மேலும் சச்சிமாதாவின் வம்சாவளியினர்களான கணவன் மனைவி, அவர்களுடைய குழந்தைகள்  என எவருமே சைவ உணவு உண்பவர்கள் அல்ல. இது எதனால்? ஏனெனில் பிராமண குடும்பத்தினர் சைவ உணவு உண்பவர்களாக இருப்பதில்லை. துவாபர யுகத்தில் வேண்டுமானால் பிராமணர்கள் சைவ உணவு உண்பவர்களாக இருந்திருக்கலாம். அவர்கள் சைவ உணவு உண்பவர்களாகவே  பிறந்திருக்க வேண்டும், அத்துடன் அதற்கான பயிற்சியும், தகுதியும் மற்றும் தீட்சையும் பெற்றிருக்கவேண்டும். ஏராளமான பக்தர்கள் பீஷ்ம பஞ்சக விரதத்தை மேற்கொண்டு ஆயலத்தில் ஹரே கிருஷ்ண ஸங்கீர்த்தனத்தில் கலந்து கொண்டுள்ளதை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பகவான் ஸ்ரீ சைதன்யர் கூறியுள்ளார், ஷுசி ஹய முசி ஹய யதி கிருஷ்ண-த்யஜே, முசி ஹய ஷுசி  ஹய யதி க்ருஷ்ண-பஜே – இழிபிறப்பில் பிறந்திருப்பினும் கிருஷ்ணருக்கு பக்தித்தொண்டாற்றுபவன் புனிதமானவனே, அதேசமயம் உயர் குடும்பத்தில் பிறந்திருப்பினும் கிருஷ்ணருக்கு பக்தித் தொண்டாற்றவில்லை என்றால் அவன் சண்டாளனே என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கூறுகின்றார்.  சுசி என்றால் பிராமணர்கள் என்று பொருள். எனினும் அவர்கள் கிருஷ்ணரை நிராகரித்தால், அவர்கள் வீழ்வது நிச்சயமே.

ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர், வைஷ்ணவர்களுக்கு உபநயனம் செய்விப்பதை தொடங்கிவைத்தார். அவர்களுக்கு பூணூல் அணிவிப்பதன் மூலமாக  வைஷ்ணவர் தன்னிச்சையாகவே பிராமணராகின்றார் என்பதையே  எடுத்துக்காட்ட விரும்பினார். ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர், வங்காளத்தின் மெட்னிபூரில் உள்ள பிராமணர்களின் சபைக்கு அழைக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் ஒரு பிராமணருக்கான 12 குணங்களை விளக்கினார். இதன்மூலமாக அங்கிருந்த பிராமணர்கள் பெருமிதம் அடைந்தனர். அதனையடுத்து அவர் ஒரு வைஷ்ணவருக்கு 13 குணங்கள் உள்ளன என்றும், 12 பிராமண குணங்களுடன் தூய பக்தியும் இணைகின்றது என்றார். எனவே, அனைத்து பக்தர்களும் ஒரு பிராமணருக்குரிய இந்த பன்னிரண்டு குணாதிசயங்களுடன் இணைத்தே கிருஷ்ண பக்தியை மேற்கொள்ள வேண்டும் என்று நாம் கூறுகின்றோம்.

மற்ற ஆன்மீக குருவினர்களைப் பற்றி எனக்குத் தெரியாது,  ஆனால் எனது  சீடர்களில் 12% மட்டுமே இரண்டாவது தீட்சை பெற்றுள்ளனர். அனைத்து சீடர்களும், அனைத்து பக்தர்களும் ஸ்ரீல பிரபுபாதருடையப் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மற்றும் பக்தி-சாஸ்திரி, போன்றதான பாடத்திட்டங்களையும் அனைவரும் பின்பற்றவேண்டும். இதுபோன்றதான தேர்வுமுறைகளை ஸ்ரீல பிரபுபாதரே ஏற்படுத்தியுள்ளார். இரண்டாவது தீட்சை பெற விரும்புபவர்கள் முதலில் பக்தி சாஸ்திரி முடிக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். சந்நியாசம் பெற விரும்புபவர்களும்கூட பக்தி-வைபவ் முடித்திருக்க வேண்டும். மேலும் ஆன்மீககுருவாக இருப்பவர்கள் பக்தி-வேதாந்த பாடத்திட்டத்தை முடிக்கவேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இஸ்கானில் இத்தகைய பாடத்திட்டங்கள் அவ்வளவாக செயல்படுத்தப்படவில்லை. ஆனால் ஸ்ரீல பிரபுபாதர் தன்னுடைய சீடர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்களாகவும், தனது  புத்தகங்களை ஆழ்ந்து படிப்பவர்களாகவும் இருக்கவேண்டும் என்று விரும்பினார்.

அவருடைய கூற்றினைப் போலவே, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் சீடர்களாகிய நமக்காக ஸ்ரீ சைதன்யர் சிக்ஷாஷ்டகத்தில் எட்டு ஸ்லோகங்களை வழங்கியுள்ளார். இவ்வாறாக சிக்ஷாஷ்டகத்தின் இந்த எட்டுப் பாடல்களை  அனைவரும் அறிந்திருக்க வேண்டும் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில்,  சிக்ஷாஷ்டகத்தின் ஒவ்வொரு பாடலும் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளதாக ஒரு சமஸ்கிருத பண்டிதர் என்னிடம் கூறினார். சமஸ்கிருத பண்டிதர்களாகிய அவர்கள் சிக்ஷாஷ்டகத்தைப் படித்து, சமஸ்கிருத இலக்கணத்திலும் கவிதையிலும் தாங்கள் எவ்வளவு தேர்ச்சி பெற்றுள்ளோம் என்பதை பரிசோதித்துக் கொள்கின்றனர். இந்த சமஸ்கிருத பண்டிதர்கள் பகவான் ஸ்ரீ சைதன்யரின் சிக்ஷாஷ்டகத்தைப் படித்துக் கொண்டிருப்பதைக் கண்டது எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது. இவ்வாறாக ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, நிமாய் பண்டிதராக, தனது பாண்டித்துவ  லீலைகளை அனுபவித்து மகிழ்ந்தார்.

இவ்வாறாக, கிருஷ்ணர், பிராமணர்கள் தகுதி பெற்றுள்ளனரா என்பதை கண்காணிப்பதற்கான சேவையை செய்து கொண்டிருந்தார். இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், கிருஷ்ணர் தனது நண்பருக்காக இதுபோன்றதான அற்பமான சேவையைகூட ஏற்றுக்கொள்கின்றார் என்பதாகும்.  கிருஷ்ணரைப் போன்றதொரு சிறந்த நண்பர் வேறு எவருளர்? கிருஷ்ணரை உங்களுடைய நண்பராக்கிக் கொண்டால், உங்களுடைய வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். அனைத்திற்கும் மேலாக, கிருஷ்ணர் நம் அனைவருக்கும் நண்பராக இருக்க வேண்டும் என்றும் நாம் விரும்பவேண்டும். நாமும் கிருஷ்ணரின் நண்பராக செயல்பட வேண்டும். பக்தி-யோகம் என்பதற்கான பொருள் நாம் முற்றிலும் கிருஷ்ணரைச் சரணடைந்துள்ளோம் என்பதாகும். நம்மை அவரிடம் சரணடையச் செய்யவேண்டும். அவர் மிகவும் அன்பானவர், அவர் தனது பக்தர்களை நண்பர்களாக்கிக் கொள்கிறார். கிருஷ்ணர் இவ்வுலகில் அவதரிப்பதற்கு முன்னரே  தனது பக்தர்களை பெற்றோர்களாக அனுப்பி வைத்துவிடுகிறார் என்று படித்துக் கொண்டிருந்தேன்; அவர் தனது பக்தர்களையே பெற்றோராக அனுப்பிவைக்கின்றார். பிறப்பதற்கு முன்னர் நமக்கான தாய் தந்தை யார் என்பது நமக்குத் தெரியாது, ஆனால் அவரோ தனது பக்தர்களைத் தேர்ந்தெடுத்து, தான் அவதரிப்பதற்கு முன்னர் தனது தாய் தந்தையராக இருக்கவேண்டியவர்களை அனுப்பிவைத்து விடுகிறார். கிருஷ்ணர் அவதரிக்கும்போது, தனது ஆன்மீக  உடலுடனேயே தோன்றுகிறார். அதனால்தான் அவர் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்காலத்தை ஒருபோதும் மறக்கவில்லை. ஆனால் தனது லீலைகளை அரங்கேற்றும்போது அவர் ஒரு சாதாரண நண்பரைப் போலவே நடந்து கொள்கிறார். சூரிய கிரஹணத்திற்காக குருக்ஷேத்திரத்தில் இருந்தபோது கூட, அவர் விருந்தினர்களின் பாதங்கங்களுக்கு பாதஅபிஷேகம் செய்வித்தார். அவரால் தனது பக்தர்களுக்காக எத்தகையதொரு அற்பமான  சேவையையும் ஏற்றுகொள்ள  முடியும். அவ்வாறே அவருடைய பக்தர்களும்,  அவருக்காக எத்தகையதொரு சேவையையும் மேற்கொள்வதற்கு தயாராக உள்ளனர்.  

கிருஷ்ணர் நாரத முனிவரிடம், "எனக்கு தலைவலிப்பதால், என் பக்தர்களின் பாத தூசி எனக்கு வேண்டும்" என்று கூறினார். உடனே நாரத முனிவரும் பலரிடமும்  சென்று அவர்களுடைய கால் தூசியை யாசித்தார். அவர் யோகிகளிடம் கேட்டார், அதற்கு யோகிகள், "எதற்காக எங்களுடைய பாத தூசி உங்களுக்கு  வேண்டும்?" என்றனர். அதற்கு நாரத முனிவர், "கிருஷ்ணருக்கு தலைவலிப்பதால், அவருக்கான தலைவலி மருந்தாக இதனை கொடுங்கள்” என்றார். உடனே அவர்கள்"இல்லை இல்லை இல்லை! எங்களால் கொடுக்க முடியாது, அப்படி கொடுத்தால் நாங்கள் நரகத்திற்குச் செல்ல நேரிடும்” என்றனர். அதன்பின்னர் அவர் துவாரகா ராணிகளிடம் சென்றபோது,  அவர்களும், “எங்கள் கணவருக்கு எங்களுடைய பாத தூசியை எவ்வாறு கொடுக்க முடியும்? இது  அபராதமாகிவிடும்” என்றுகூறி மறுத்துவிட்டனர். அதனையடுத்து அவர் விருந்தாவனம் சென்றார்.  கோபியர்களிடம், "கிருஷ்ணருக்கு தலைவலிக்கிறது. இதற்கான மருந்தாக அவர் தனது பக்தர்களின் தாமரை பாத தூசியை வேண்டுகிறார்” என்று கூறினார். "கிருஷ்ணருக்கு தலைவலியா?” என்று வினவிய கோபியர்கள், “அவருக்கு பக்தர்களின் கால் தூசு தானே வேண்டும்? எடுத்துக் கொள்ளுங்கள்! எவ்வளவு வேண்டுமானாலும் தருகின்றோம்” என்றனர். அதற்கு நாரத முனிவர், "இதன் காரணமாக நீங்கள் நரகம் செல்ல நேரிடும் என்பதை எண்ணி பயப்படவில்லை?” என்றார். அவர்களோ, "கிருஷ்ணரின் தலைவலியை குணப்படுத்துவதற்காக நாங்கள் எத்தகைய நரகத்திற்கும் செல்லத் தயாராக இருக்கிறோம், அவருடைய தலைவலி குணமானால் போதும்!" என்றனர். ஹரிபோல்! இவ்வாறாக, இதுதான் கோபியர்களின் மனோபாவமாகும். கிருஷ்ணரின் நலனுக்காக அவர்கள் நரகத்திற்குச் செல்லவும் தயாராக இருந்தனர்,

இன்று காத்யாயனி பூஜையின் முதல் நாள். கிருஷ்ணரைத் தங்கள் கணவனாக  அடைவதற்காக கோபியர்கள் தவம் இயற்றி காத்யாயனியை வழிபடுகிறார்கள். உண்மையில், இந்த கோபியர்கள் மிகவும் புனிதமானவர்கள். கோபியர்களாக பிறப்பதற்கு ஒருவர் மிகவும் தகுதியானவராக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். இவ்வாறாக, இந்த ஸ்லோகத்திலிருந்து நாம் எண்ணற்ற  விஷயங்களைக் கற்றுக் கொள்கின்றோம். கிருஷ்ணரே மிகச்சிறந்த நண்பர், பிராமணர்கள் தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும், என்பதுபோன்றதான பல விஷயங்கள். அவர் இவ்வுலகிற்கு வரும்போது சாதாரண மனிதனாகவே நடந்து கொள்கிறார். இருப்பினும் அவர் அர்ஜுனனிடம் பகவத் கீதையை உபதேசித்தபோது, ​​​​எனக்கு எல்லாம் நினைவிருக்கிறது என்று கூறினார். 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, நான் இதனை விவஸ்வானுக்குக் கற்றுக் கொடுத்தேன். நீயும் அங்கிருந்தாய். ஆனால் நீயோ மறந்துவிட்டாய்,  நானோ அனைத்தையும் நினைவில் வைத்திருக்கிறேன். எனவே பக்தர்களாகிய நமக்கு கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.  பொதுவாக பௌதிக உலக மக்கள், தங்களுடைய புலன்திருப்திக்காகவே  கிருஷ்ணரை அல்லது சில தேவர்களை வழிபடுகின்றனர். ஆனால் உண்மையில், கிருஷ்ணருக்கு சேவை செய்பவர்கள், அவரது புலன்களை திருப்திபடுத்துபவர்கள் மிகமிக அரிதே. அனைத்துவிதமான பௌதிக விருப்பங்களிலிருந்தும் விடுபட வேண்டும்.

ஸர்வோபாதி வினிர்முக்தம்
தத்-பரத்வேன நிர்மலம்
ஹ்ருஷீகேண ஹ்ரீஷீகேஷ
ஸேவனம் பக்திர் உச்யதே
[சைதன்ய சரிதாம்ருதம், மத்திய லீலை 19.170]

எனவே எல்லாப்புலன்களுக்கும் எஜமானரான பரமபுருஷ பகவானின் தொண்டில் நமது எல்லாப் புலன்களையும் ஈடுபடுத்த வேண்டும். யுதிஷ்டிரர் கிருஷ்ணரை யாகத்திற்கு வருமாறு அழைத்தார். அங்கு வந்த கிருஷ்ணரால் சேவையின்றி இருக்கமுடியவில்லை, எனவே அவர் நான் ஏதாவது செய்தாக வேண்டும் என்றார்.  யாகம் செய்வதற்கு தகுதியுள்ள பிராமணர்களை தேர்ந்தெடுக்கின்றேன் என்றார்.   ஒவ்வொரு அவதாரத்திற்கும் குறிப்பிட்ட மனோபாவம் இருக்கும்.  ஆனால் அனைத்து அவதாரங்களுக்கும் கிருஷ்ணரே மூலம் என்பதால், அவரிடம் அனைத்துவிதமான மனோபாவங்களும் உள்ளடங்கியுள்ளன. தனது பக்தனைக் காப்பதற்காக அவதரித்த நரசிம்மதேவரிடம், விசேஷமான கோபம் காணப்பட்டது. சக்தியாவேஷ-அவதாரமாகிய பரசுராமர் குற்றவாளிகளை அழிப்பதற்காகத் தோன்றினார். வராஹதேவர் கர்போதக சமுத்திரத்தில் மூழ்கிக்கிடந்த பூமியை காப்பதற்காக அவதரித்தார். அவர் ஒரு பன்றி வடிவில் தோன்றி, தனது தந்தத்தில் ஏந்தி பூமியை வெளிக்கொணர்ந்தார். கருணையின் வடிவமாக அவதரித்த ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவோ, ஸங்கீர்த்தன இயக்கத்தை நிறுவி, பகவத் பிரேமையை விநியோகம் செய்தார். பகவான் ஸ்ரீ சைதன்யரைப் பின்பற்றுவதற்கும், அவருடைய ஸங்கீர்த்தன இயக்கத்தைப் பிரச்சாரம் செய்வதற்கும் கருணையைப் பெற்றுள்ள நாம் அனைவரும் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாவோம். பகவான் ஸ்ரீ சைதன்யர் கருணையின் வடிவாக அவதரித்துள்ளார். எனவேதான் ஸ்ரீல பிரபுபாதர் பகவான் ஸ்ரீ சைதன்யரின் கருணைக்கு எல்லையே இல்லை கூறுகின்றார்! மேலும் அவர்  பிரபு நித்யானந்தரிடமும் கருணையை வழங்குமாறு வேண்டுகின்றார். ஏனெனில்  நித்யானந்த பிரபு மாதாயால் தாக்கப்பட்டு இரத்தம் கசிந்த நிலையிலும்கூட, "நீ என்னை அடித்து இரத்தம் வரச் செய்துவிட்டாய் என்ற காரணத்திற்காக, நான் உனக்கு கருணை வழங்க மாட்டேன் என்று நினைத்துவிட்டாயா?" என்றார். இவ்வாறாக, நிதாய் கௌரா மிகவுமே கருணை வாய்ந்தவர்கள்! எனவே அவர்களுடைய கருணையால் நாம் கிருஷ்ண உணர்வு இயக்கத்தில் நிலைபெற்றிருக்க வேண்டும். அவர்களைவிட கருணைவாய்ந்தவர்கள் எவருளர்?  இவ்வாறாக அவர்கள் ஜாதி, மதம், மற்றும் கலாச்சார பேதமின்றி அனைவரையும் விடுவிப்பதற்காகவே அவதரித்துள்ளனர்.  சைதன்ய மஹாபிரபு கீ ஜெய்!

இப்போது நாம் சில கேள்விகளுக்கு பதிலளிப்போம்.

ஹரி-ஹர சைதன்ய தாஸர்: உங்கள் சீடர்களில் 12% பேர் மட்டுமே இரண்டாவது தீட்சை பெற்றுள்ளதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். பிராமண தீட்சைக்கு பக்தி சாஸ்திரியைத் தவிர வேறு என்னென்ன தகுதிகள் இருக்கவேண்டும்?  

ஜெயபதாகா ஸ்வாமி: இதனை நீங்கள் மானி கோபால தாஸரிடம் வினவினால்,  அவர் உங்களுக்கு அனைத்தையும் விளக்குவார். அடிப்படையில், நீங்கள் ஸ்ரீல பிரபுபாருடைய புத்தகங்கள் சிலவற்றை படித்திருக்க வேண்டும். மந்திர உச்சாடனத்தையும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். முதல் தீட்சைக்கான சரிபார்ப்புப் பட்டியலில் நீங்கள் முடிக்காதவைகள்  ஏதேனும் இருந்தால், அவைகளை இரண்டாவது தீட்சைக்கு முன் முடித்திருக்க வேண்டும். மேலும், மற்றைய விஷயங்களை குறித்து நீங்கள் JPS அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

 சுகமலா நித்யானந்தா தாஸர், ஹபீப்கஞ்ச்: ஸ்ரீல பிரபுபாதர் ஒரு சீடருக்கு இரண்டாவது தீட்சை கொடுத்தார். அப்போது அந்த சீடர் ஸ்ரீல பிரபுபாதரிடம்,  நான் இப்போது பிராமணனாக விட்டேனா? என்று வினவியுள்ளார். அதற்கு ஸ்ரீல பிரபுபாதர், பிராமணருடைய பன்னிரண்டு குணங்களையும் அடைவதற்கான வாய்ப்பை நான் உங்களுக்கு வழங்கியுள்ளேன் என்றார். 12ல் 1 குணத்தைக்கூட என்னால் பெற முடியவில்லை என்றால் நான் பிராமணனாக ஆகமுடியுமா?

ஜெயபதாகா ஸ்வாமி: நாம் 12 குணங்களையும் அடைய முயற்சிக்க வேண்டும். இதில் ஏதாவது நமக்கு சிரமம் இருந்தால், நமது மூத்த ஆன்மீக சகோதரர் அல்லது ஆன்மீக சகோதரி அல்லது ஆன்மீககுருவை தொடர்பு கொள்ள வேண்டும். தீட்சை பெறுவது புதிய பிறவி எடுப்பது போன்றதாகும். பிறந்த பிறகு மற்ற விஷயங்களை நீங்கள் பயிற்சி செய்வதன் மூலமாக வளர்த்துக் கொள்ளவேண்டும்.  பிறந்தவுடனேயே நீங்கள் அனைத்து தகுதிகளையும் பெற்றுவிட்டீர்கள் என்பது பொருளாகாது, பயிற்சியின் மூலமாகத்தான் நீங்கள் அதனை அடையவேண்டும்.

கௌரச்சந்திர பகவான் தாஸர்: கிருஷ்ணரைச் சார்ந்திருக்க வேண்டும் என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள், ஆனால் சில சமயங்களில் நாம் கிருஷ்ணரைச் சார்ந்திருப்பதாகச் சொல்லிக்கொண்டாலும், நமக்கான பொறுப்புகளைப்  புறக்கணித்து விடுகிறோம். நாம் கிருஷ்ணருக்குச் சேவை செய்து கொண்டிருக்கும் வேளையில், நாம் கிருஷ்ணரைச் சார்ந்திருக்கிறோம் என்பதை எப்படிப் புரிந்துகொள்வது?

ஜெயபதாகா ஸ்வாமி: இது எனக்கு ஒரு உதாரணத்தை நினைவூட்டுகிறது, ஒரு முறை வெள்ளம் ஏற்பட்டபோது, அங்குவந்த காவல்துறையினர் ஒருவரிடம்,  "நாங்கள் உங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற வந்துள்ளோம்” என்று கூறினார்.

 அதற்கு அவர் "நான் கிருஷ்ணரைச் சார்ந்திருக்கிறேன்" என்றார்.

அப்போது தண்ணீர்வரத்து அதிகமாகியது. அவரை அழைத்துச் செல்ல ஒரு படகு வந்தது, அவர் மீண்டும் கூறினார், "நான் கிருஷ்ணரைச் சார்ந்திருக்கிறேன்!"

பின்னர் தண்ணீர் மட்டம் அதிகமாக அதிகமாக, அவர் மாடியின் மீது ஏறிக்கொண்டார். அப்போது ஒரு ஹெலிகாப்டர் வந்து, "வந்து விடுங்கள், வந்து ஏறிக்கொள்ளுங்கள்!" என்று அழைத்தது.

 ஆனால் அவரே, ‘இல்லை, இல்லை, நான் கிருஷ்ணரைச் சார்ந்திருக்கிறேன் என்றார்.

அப்போது வெள்ளம் அதிகமாகி, அவர் இறந்தார். அவர் வைகுண்டத்திற்குச் சென்று கிருஷ்ணரிடம் “ஏன் என்னைக் காப்பாற்றவில்லை?” என்று கேட்டார்.

"நான் காவல்துறையை அனுப்பினேன், நான் படகை அனுப்பினேன், நான் ஹெலிகாப்டரை அனுப்பினேன், நீங்கள் எதனையும் ஏற்கவில்லை!" என்றார் கிருஷ்ணர். எனவே, நீங்கள் கிருஷ்ணரைச் சார்ந்து இருக்கின்றீர்கள் என்றால், அவரால் அனுப்பப்படும் உதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும். கிருஷ்ணருடைய செயல்கள் அற்புதமானது, தனித்துவம் வாய்ந்தது!

கேள்வி: துவாரகையின் ராணிகள் கிருஷ்ணரின் தலைவலியைக் குணப்படுத்துவதற்காக தங்களின் தாமரை பாததூசியைக் கொடுக்க மறுத்தனர்.  எனினும் அவர்களும் கிருஷ்ண பக்தர்கள்தானே? இதை நாம் எப்படி புரிந்து கொள்வது?

 ஜெயபதாகா ஸ்வாமி: இது சொல்வழிக்கதையே தவிர, இது சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரியவில்லை. பொதுவாக, துவாரகையின் ராணிகளும்  பக்தர்களே. எனினும் பரகீய ரஸம் மற்றும் ஸ்வகீய-ரஸம் என்று உள்ளது. ஸ்வகீய-ரஸத்தில் உள்ள அவருடைய மனைவிகள் தங்கள் கணவர் மீது தங்களுடைய பாத தூசி படுவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் கோபியர்கள், கிருஷ்ணரின் தலைவலிக்காக நரகத்திற்குச் செல்லவும் தயாராக இருக்கின்றனர். இது உண்மைக் கதையா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், கிருஷ்ணரின் மீதான கோபியர்களின் அன்பு துவாரகையின் ராணிகளை விட உயர்ந்தது என்பதை நாம் அறிவோம். அதனையே இந்த உதாரணத்தின் மூலமாக வெளிப்படுத்த விரும்புகிறோம்.

 பலவான் ஸ்ரீனிவாச தாஸர், மெல்போர்ன்: நாங்கள் தென்னிந்திய தமிழ்க் குடும்பத்தினர்கள் – எத்தகைய கட்டத்தில் எங்களுடைய அபராதங்கள்  மன்னிக்கப்படாது?

 ஜெயபதாகா ஸ்வாமி: நீங்கள் அந்த நிலைக்கு வரமாட்டீர்கள் என்று நம்புகிறேன்! அத்துடன் எப்போதும் குற்றங்களைத் தவிர்ப்பதில் எச்சரிக்கையுடன் இருங்கள்.  பகவான் ஸ்ரீ சைதன்யரின் கருணைக்கான எல்லை என்னவென்று எனக்குத் தெரியவில்லை, அதற்காக நான் அதனை அவ்வளவு தூரத்திற்கு எடுத்துச் செல்ல விரும்பவில்லை! குறிப்பாக பகவான் ஸ்ரீ சைதன்யர். வைஷ்ணவர்களுக்கு அபராதம் இழைப்பவர்களை விரும்புவதில்லை. சாபால கோபாலன் ஸ்ரீவாஸருக்கு அபராதம் புரிந்தார் என்பதால் நீ துன்புறுவாய் என்று பகவான் அவரை சபித்தார். ஆனால் சாபால  கோபாலன் ஸ்ரீவாஸரிடம் மன்னிப்புக் கேட்டதும், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு சாபால கோபாலனை கட்டியணைத்து அவரைக் காப்பாற்றினார்.

இனி நாம் சில ஆலயங்களுக்கு சென்று வருவோம். அதனையடுத்து இல்லங்களுக்குச் செலவோம்.

- END OF TRANSCRIPTION -
Transcribed by கந்தர்விகா மோகினி தேவி தாசி
Verifyed by
Reviewed by

Lecture Suggetions