Text Size

20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29

13 Nov 2021|Duration: 00:44:19|Tamil|Śrīmad-Bhāgavatam|Śrī Māyāpur, India

மூகம் கரோதி வாஞ்சலம் பங்கும் லங்காயதே கிரிம்
யத்-க்ருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குரும் தீன-தாரணம்
பரமானந்த-மாதவம் ஸ்ரீ சைதன்ய ஈஷ்வரம்
ஹரி: ஓம் தத் ஷத் 

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய

 ஸ்ரீமத் பாகவதம் 1.12.29

 இதி ராஜ்ன உபாதிஷ்ய
விப்ரா ஜாதக கோவிதா:
லப்தாபசிதய: ஸர்வே
ப்ரதிஜக்மு: ஸ்வகான் க்ருஹான்

 

மொழிபெயர்ப்பு: இவ்வாறாக, ஜோதிட அறிவிலும், பிறப்புச் சடங்கை செய்வதிலும் கைதேர்ந்தவர்கள், இக்குழந்தையின் எதிர்கால வரலாற்றைப் பற்றி யுதிஷ்டிர மகாராஜனுக்கு உபதேசித்தனர். பிறகு இதற்குக் கைமாறாக போதுமான ஊதியத்தைப் பெற்றுக் கொண்டபின், அவர்கள் அனைவரும் அவரவர் இல்லங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.

ஸ்ரீல பிரபுபாதருடைய பொருளுரை :  வேதங்கள் பௌதிக மற்றும் ஆன்மீக அறிவுப் பொக்கிஷமாகும். இந்த அறிவு தன்னுணர்வை நோக்கமாகக் கொண்டதாகும். அதாவது, வேதங்கள் நாகரீகமடைந்த மனிதனுக்கு எல்லா வகையிலும் வழிகாட்டியாக உள்ளன. மனித வாழ்வு எல்லாப் பௌதிக துன்பங்களிலிருந்தும் விடுபடுவதற்குரிய சிறந்த வாய்ப்பு என்பதால், அது பௌதிகத் தேவைகள் மற்றும் ஆன்மீக முக்தி ஆகிய இரு விஷயங்களிலும் வேதங்களின் அறிவால் நன்கு வழிநடத்தப்படுகிறது. வேத அறிவுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட குறிப்பிட்ட புத்திசாலி பிரிவினர் “விப்ரர்கள்” அல்லது வேத வல்லுனர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். வேதங்களில் வெவ்வேறு பிரிவுகள் உள்ளன, இவற்றுள் ஜோதிட சாஸ்திரமும், மருத்துவ சாஸ்திரமும் சாதாரண மனிதனுக்கு முக்கியமாக தேவைப்படுபவையாகும். எனவே சமூகத்திற்கு வழிகாட்டுவதற்காக பிராமணர்கள் எனப்படும் புத்திசாலி பிரிவினர் வேத ஞானத்தின் பல்வேறு பிரிவுகளைக் கற்றறிந்தனர். இத்தகைய புத்திசாலி பிரிவினர்  “தனுர்வேதம்” எனப்படும் போர்க்கலையையும்கூட கற்றறிந்தனர். மேலும் விப்ரர்களான துரோணாச்சாரியர் மற்றும் கிருபாச்சாரியரைப் போன்றவர்களும் கூட இத்தகைய கல்வியின் ஆசிரியர்களாக இருந்தனர்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விப்ர எனும் சொல் கவனிக்கத்தக்கதாகும். விப்ரர்களுக்கும் பிராமணர்களுக்கும் சிறிய வித்தியாசம் உண்டு. விப்ரர்கள் கர்ம-காண்டத்தில் கைதேர்ந்தவர்களாவர். இவர்கள் வாழ்வின் பௌதிகத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு சமூகத்திற்கு வழிகாட்டுகின்றனர். ஆனால் பிராமணர்களோ ஆன்மீக அறிவில் நிபுணர்களாவர். இப்பிரிவு “ஞான காண்டம்” என்று அழைக்கப்படுகிறது. இதற்கும் மேலாக இருப்பது “உபாஸனா காண்டமாகும்.” இக்காண்டத்தின் உச்ச கட்டமே பகவான் விஷ்ணுவின் தொண்டாகும். மேலும் பூரணத்துவத்தை அடையும் பிராணமர்கள் வைஷ்ணவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். வெவ்வேறு குணங்களிலுள்ள வழிபாடுகளில் விஷ்ணு வழிபாடு உயர்ந்ததாகும். முன்னேற்றமடைந்த பிராமணர்கள் பகவானின் உன்னத அன்புத்தொண்டில் ஈடுபட்டுள்ள வைஷ்ணவர்களாவர். இவ்வாறாக பக்தித்தொண்டு விஞ்ஞானமாகிய ஸ்ரீமத் பாகவதம் வைஷ்ணவர்களுக்கு மிகவும் பிரியமானதாகும். மேலும் ஸ்ரீமத் பாகவதத்தின் ஆரம்பத்தில் விளக்கப்பட்டதைப் போல், இது வேத ஞானத்தின் பழுத்த பழமும், மூன்று காண்டங்களுக்கும் (கர்ம, ஞான மற்றும் உபாஸனா) மேற்பட்ட உயர்ந்த பாடப்பொருளைக் கொண்டதுமாகும்.

கர்ம காண்ட நிபுணர்களுக்கிடையில், விப்ரர்கள் எனப்படும் ஜாதக நிபுணர்களும் ஒரு பிரிவினராவர். இவர்களால் ஒரு குழந்தையின் பிறந்தநேரம், நட்சத்திரம் போன்றவைகளைக் கொண்டே அக்குழந்தையின் எதிர்காலத்தை கணித்துவிட  முடியும். இத்தகைய கைதேர்ந்த ஜாதக விப்ரர்கள் பரீட்சித்து மகாராஜன் பிறந்த காலத்தில் இருந்தனர். இவரது பாட்டானரான யுதிஷ்டிர மகாராஜனும் அந்த விப்ரர்களுக்குப் போதுமான அளவு தங்கம், நிலம், கிராமங்கள், தானியங்கள் மற்றும் வாழ்வுக்கு அத்தியாவசியமான மற்ற தேவைகள் ஆகியவற்றை அளித்தார். இவற்றுள் பசுக்களும் அடங்கும். சமூக அமைப்பில் இத்தகைய விப்ரர்களுக்கு தேவையுள்ளது. இத்தகைய விப்ரர்களுக்கு அரசாங்கம் போதுமான வசதிகளை அளித்ததால், இவர்கள் பொதுமக்களுக்கு இலவசமான சேவைகளைச் செய்தனர். இவ்வாறாக இந்த அறிவு எல்லோருக்கும் கிடைக்கக்கூடியதாக இருந்தது.

ஜெயபதாகா ஸ்வாமி: இவ்வாறாக இந்த குறிப்பிட்ட ஸ்லோகமானது பல்வேறு வகையான பிராமணர்களைப் பற்றி விளக்குகிறது. விப்ர என்றால் பலன் கருதும்  செயல்களில் கைதேர்ந்தவர்கள், பிராமணர்கள் என்றால் ஆன்மீகம், உன்னத விஞ்ஞானத்தில் கைதேர்ந்தவர்கள், வைஷ்ணவர்கள் என்றால் பக்குவமடைந்த பிராமணர்கள் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. இவ்வாறாக விப்ரர்கள் அரசாங்கத்தால் கவனித்துக் கொள்ளப்பட்டனர். இதன் காரணமாக விப்ரர்கள் ஜோதிடர்களாக பொதுமக்களுக்கு இலவச சேவை செய்து வந்தனர். துரதிர்ஷ்டவசமாக, அதுமாதிரியான நிலைமை இன்று இல்லை. ஜோதிடர்களை நாட்டு பிரஜைகளுக்கான இலவச சேவையில்  அரசு பராமரிப்பதில்லை. நீங்கள்  ரூ.100 கொடுத்தால், ஓரளவிற்கு சொல்வேன். ரூ. 250 கொடுத்தால், முழுமையாக சொல்வேன். இவ்வாறாக அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். எனவே, நமது வேத சமுதாயத்தில் பல்வேறு அமைப்புகள் இருந்தன. தற்போது, ​​பகவான் ஸ்ரீ சைதன்யர் அவதரித்த காலத்தில், அவரது தாத்தா நீலாம்பர சக்ரவர்த்தி தலைசிறந்த ஜோதிடராக இருந்தார். ஸ்ரீ சைதன்யருக்கு அன்னப் பிரசன்ன நிகழ்ச்சியுடன் நாம கரண நிகழ்ச்சியையும் செய்வித்தனர். அன்னப் பிரசன்ன நிகழ்வின்போது, குழந்தையின்முன்னர் பணமும் புத்தகங்களும் வைக்கப்படும்.  அதில் ரூபாய்கட்டு, நாணயங்கள், 20 ரூபாய் தாள்கள், தங்கம் என பலவிதங்களில் பணத்தை வைத்திருந்தனர்.   இது பணத்தின் மீது மோகம் உள்ளவரா இல்லையா என்பதை பரிசோதிப்பதற்காகவே. ரூபாய்கட்டு, நாணயங்கள், ரூபாய், தங்கம். இவ்வாறாக அவர் எதைத் தேர்ந்தெடுப்பார்? தங்கத்தையா அல்லது நாணயத்தையா? அவர்கள் ஒரு பேனாவையும் வைத்திருந்தனர், பண்டிதராக இருக்கும்பட்சத்தில் குழந்தை அதனை தேர்ந்தெடுக்கலாம் என்பதற்காக வைத்திருந்தனர். பல்வேறு வகையான புத்தகங்கள். கர்ம-காண்டம், ஞான-காண்டம், மற்றும் பாகவதத்தையும் வைத்தனர். அதன்பின்னர் அவர்கள் பகவான் ஸ்ரீ சைதன்யரை இறக்கிவிட்டனர், அவரோ நேராக ஸ்ரீமத்-பாகவதம் இருக்கும் இடத்திற்குச் சென்றார். ஹரிபோல்! சற்றும் தாமதிக்காமல் அதனை எடுத்து கட்டியணைத்துக் கொண்டார். ஹரிபோல்! இதனைக் கண்ட அனைவரும் குழந்தையின் தாத்தா நீலாம்பர சக்ரவர்த்தியிடம், “இந்தக் குழந்தையின் எதிர்காலம் எப்படியிருக்கிறது?” என்று வினவினர். குழந்தையின் ஜாதகப்படி குழந்தை பிற்காலத்தில் சந்நியாசத்தை ஏற்கும் என்பதை அவர் அறிந்திருந்த போதும், குடும்பத்தினர் வருத்தமடைவர் என்பதற்காக அதனை அவர் வெளிப்படுத்தவில்லை. ஆனால் அவர் சொன்னார், “இந்தக் குழந்தை பூமி பாரத்தை சுமக்கும்! எனவே, இவனுக்கு விஸ்வம்பரர் என்று பெயர் சூட்டுகிறேன்” என்றார்.  ஆனால் வேப்ப மரத்தடியில் பிறந்ததால் நிமாய் என்று அழைக்கப்பட வேண்டும் என்று எல்லா பெண்களும் விரும்பினர். இந்த விஷயத்தை தீர்த்து வைக்குமாறு நீலாம்பர சக்ரவர்த்தியிடமே கேட்டுக் கொண்டனர். அவரும் அவனுடைய செல்லப்பெயர் நிமாய் என்றும்,  அதிகாரப்பூர்வமான பெயராக விஸ்வம்பரர் என்று அழைக்கப்படும் என்றும் கூறி தீர்வளித்தார். இவ்வாறாக அனைவரும் அவரை நிமாய் பண்டிதர் என்றே அழைத்தனர். ஆனால் அவரது திருமணம் மற்றும் பிற விஷயங்களுக்கு, அவர் விஸ்வம்பரர் என்று அழைக்கப்பட்டார். இவ்வாறாக இந்த ஜோதிடக் கணக்கீடு பகவான் ஸ்ரீ சைதன்யரின் வாழ்க்கையிலும் கணக்கிடப்பட்டது.

பெற்றோருக்கு குழந்தையின் எதிர்காலம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று முந்தைய வகுப்பில் சொல்லிக் கொண்டிருந்தேன். புகழ்பெற்ற ஆறு கோஸ்வாமிகளில் ஒருவரான கோபால பட்ட கோஸ்வாமி ஸத்-க்ரியா-ஸார-தீபிகா என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். மேலும் அந்த புத்தகத்தில் கர்ப்பதான ஸம்ஸ்கார முறை உள்ளது, இந்த முறையை கிருஹஸ்தர்கள் அவசியம் பின்பற்றவேண்டும்.  ஸ்ரீல பக்திவினோத தாகூருடைய இரண்டு மகன்களுமே சந்நியாசி என்பதை பார்த்தோம். பொதுவாக, அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே பக்தர்கள் என்றே நினைக்கிறேன். நிச்சயமாக, இதற்கு உத்தரவாதம் இல்லை. பக்தர்களாக இருக்கும்பட்சத்தில் 100 குழந்தைகளாயினும் பெற்றேடுப்பேன் என்று ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் கூறுவார். அவர் ஒரு கிருஹஸ்தராக இருந்திருந்தால், எல்லோரும் பக்தர்களே என்ற பட்சத்தில் நூறு குழந்தைகளைப் பெற்றிருப்பார். இவ்வாறாக, ஒரு பக்த குழந்தை வேண்டும் என்பதற்காக விக்ரஹங்களிடம் பிராத்தித்துக் கொள்ளவேண்டும். பக்த குழந்தை நீண்ட ஆயுளுடன், நல்ல ஆரோக்கியத்துடன், நல்ல மகனாக இருக்கவேண்டும் என்றும்  பிரார்த்திக்க வேண்டும். கணவனும் மனைவியும் பக்த குழந்தையைப் பெறுவதற்கேற்ற வகையில் தங்களுடைய உணர்வுகளை தூய்மைப் படுத்திக் கொள்வதற்காக, கூடுதலான சுற்றுகள், 50 சுற்றுகள் செய்யவேண்டும், அதுவே சிறப்புடைதாகும் என்று ஸ்ரீல பிரபுபாதர் பரிந்துரைக்கின்றார். அதனையடுத்து  ஸ்ரீல பிரபுபாதர், பெற்றோர்கள் தங்கள் குழந்தையுடன் அதிகளவிலான நேரத்தை செலவிட வேண்டும் என்று கூறுவார். ஒரு இடத்தில், ஸ்ரீல பிரபுபாதருக்கு ஒரு பெண் சீடர் எழுதிய கடிதத்தில், தனது குழந்தையை பராமரிக்க வேண்டியுள்ளதால், விக்ரஹ வழிபாடு தடைபடுவதாக வருந்தினார். அதற்கு ஸ்ரீல பிரபுபாதர் எழுதினார், அப்படியென்றால் உங்களுடைய விக்ரஹ வழிபாட்டை நிறுத்திக்கொள்ளுங்கள். இந்த குழந்தைகள் கிருஷ்ணரால் அனுப்பப்பட்டவர்கள் என்பதால், அவர்களை பக்தர்களாக ஆக்குவதே உங்களுக்கான கடமையாகும். முதல் ஐந்து வருடங்கள் உங்கள் குழந்தையிடம் அன்பாக இருங்கள், 5-15 வயதுவரை கண்டித்து வளருங்கள், 16 வயதிற்கு பிறகு உங்களுடைய குழந்தையை நண்பராக நடத்துங்கள் என்று சாணக்கிய பண்டிதர் அறிவுறுத்தியுள்ளார். எனவே ஸ்ரீல பிரபுபாதர் சிறுவயதில் இரண்டு கைத்துப்பாக்கிகள் வேண்டும் என்று கூறியது போல், திரைப்படங்களில் வீரர்களைப் பார்த்ததால்! அவருடைய தந்தையும் அவருக்கு இரண்டு கைத்துப்பாக்கிகளை வாங்கிக் கொடுத்தார். எனினும், சாதுக்கள் அவரது வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவரது தந்தை அவர்களிடம், எனது மகன் ராதாராணியின் பக்தனாக இருப்பதற்கு ஆசிர்வதியுங்கள் என்று வேண்டுவார்.

இவ்வாறாக, குழந்தையினுடைய இளம்வயதில் பெற்றோரின் பங்கு மிகவுமே அவசியமாகும். ஒரு ஆஸ்திரேலிய பெண்மணி, பொறியியல் துறையில் ஆசிரியராக பணியாற்றும் அவர் மாயாபுரை தரிசிக்க வந்திருந்தார். குழந்தைகளுக்கான பயிற்சியை குழந்தையிலேயே தொடங்கவேண்டும் என்று அவர் கூறினார். 2-3 வயது, பெற்றோர்கள் குழந்தைகளை நடத்தும் விதத்தில்தான் அவர்களுடைய எதிர்காலம் உருவாகிறது. நான் நேற்று கோபாஷ்டமி பூஜைக்காக மாயாபுர் கோசாலைக்கு  சென்றிருந்தேன். நிறைய பெண்மணிகள் தங்களுடைய குழந்தைகளுடன் வந்திருப்பதைப் பார்த்தேன். இது மிகவும் மங்களகரமானது. ஸ்ரீல பிரபுபாதர் இத்தகைய குழந்தைகளே நமது இயக்கத்திற்கான எதிர்கால தலைவர்கள் என்று கூறினார். எனவே, பெண்கள் மட்டுமே செய்யக்கூடிய பல சேவைகளில் இதுவும் ஒன்று! இவ்வாறாக, அரசாங்கம் விப்ரர்களை பராமரித்து வந்ததால், அவர்களால் பொது மக்களுக்கு இலவச சேவையை வழங்க முடிந்தது.  இவை அனைத்தும் வேத காலத்தில் இருந்தவையே, ஆனால் இன்றைய காலத்தினர் அது போன்ற வேத உபதேசங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வேதங்களே முழு மனித சமுதாயத்திற்கும் வழிகாட்டி என்று ஸ்ரீல பிரபுபாதர் கூறிவார். நாம் கிருஷ்ணரிடம் எவ்வாறு பற்றுதலையும் அன்பையும் வளர்த்துக் கொள்ளமுடியும் என்பதை வேதங்கள் பரிந்துரைக்கின்றன. உதாரணமாக, யுதிஷ்டிர மஹாராஜர் உலகம் முழுவதற்கும் பேரரசராக இருந்தார். அதற்குமுன்பு, பிருது மஹாராஜா முழு உலகத்திற்கும் பேரரசராக இருந்தார். இவ்வாறாக அவர் ஏழு தீவுகளுக்கும் பேரரசராக இருந்தார். தற்போது, தென் அமெரிக்காவில் விஷ்ணுவின் விக்ரஹத்தை கண்டுபிடித்திருப்பதைப்போல.  ஆனால் அந்த விக்ரஹத்தை இந்தியாவிற்கே திரும்பிக்கொடுக்குமாறு தேவாலயங்கள் கூறுகின்றன. முதலாவதாக அந்த விக்ரஹம் எப்படி அங்கு வந்தது? உலகம் முழுவதும் வேத கலாச்சாரம் பின்பற்றப்பட்டு வந்ததை வெளிப்படுத்த அவர்கள் விரும்பவில்லை. ரஷ்யாவிலுள்ள எண்ணற்ற விக்ரஹங்களும், எண்ணற்ற விஞ்ஞானங்களும் அந்த காலத்தில் வேத கலாச்சாரம் நிறைந்திருந்ததை நிரூபிக்கின்றன. அவர்களிடம் ரஷ்ய வேதம் என்று அழைக்கப்படும் புத்தகங்கள் உள்ளன, அவை பல்வேறு விக்ரஹங்கள் மற்றும் பல்வேறு விஷயங்களைப் பற்றிய விளக்கங்களைக் கொண்டுள்ளன. ஸ்ரீல பிரபுபாதர் ஆஸ்திரேலியா என்று அழைக்கப்படுவதற்கான காரணம் பாண்டவர்கள் தங்களுடைய அஸ்திரங்களை அங்கு பாதுகாத்து வந்ததினாலேயே என்று விளக்குவார். முந்தைய யுகத்தில், உலகம் முழுவதும் வேதத்தை பின்பற்றிவந்தது.  ஸ்ரீமத்-பாகவதம் 2.4.18 இல் ஒரு ஸ்லோகம் உள்ளது:

கிராத-ஹுணாந்த்ர-புலிந்த-புல்கசா
ஆபீர-சும்பா யவனா: கஸாதய:
யே ’ன்யே ச பாபா யத்-அபாஸ்ரயாஸ்ரயா:
கத்யந்தி தஸ்மை ப்ரபவிஷ்ணவே நம:

 சீனர்கள், மங்கோலியர்கள், ஜப்பானியர்கள் என்று பொருள். புலிந்த  என்றால் கிரேக்கர்கள், ஐரோப்பிய கிரேக்கர்கள். யவன என்றால் துருக்கியர்கள் மற்றும் மத்திய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொருள். இது இஸ்லாம் தொடங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே இருந்ததாகும். இஸ்லாம் சுமார் 1400 ஆண்டுகள் பழமையானது. ஆனால் ஸ்ரீமத் பாகவதம் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது. ஹூனாந்திரர்கள், ஹூனர்கள் என்பவர்கள் ரஷ்யர்கள், ஜெர்மனியர்கள். எனவே, இவ்வனைத்து இடங்களில் உள்ளவர்கள் அனைவரும் கிருஷ்ணருடைய ஒரு தூயபக்தரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றினால், அவர்களும் பக்தர்களாக மாறிவிடுவர். இவ்வாறாக மேற்குறிப்பிட்டுள்ள இடங்கள் அனைத்தும் வேத காலத்து அரசர்களுக்குரியதாக இருந்துள்ளது என்பது புலனாகிறது. துருவ மகாராஜர் யக்ஷர்களுடன் போரிட்டார். கந்தர்வர்கள் வேற்று கிரகத்தில் இருந்து வந்து குரு வம்சத்தினரை தாக்கினர். முன்பெல்லாம் இந்தப் பூவுலகின் அரசர்கள் பிற கிரகங்களுக்குப் பயணம் செய்துவந்தனர். மேலும் மேலுலகங்களில் உள்ள தேவர்கள் இந்த கிரகத்திற்கு வந்துசென்றனர். கடவுள் கைவிடப்பட்ட இடம் என்பதால் இப்போது அவர்கள் வருவதில்லை. அவர்கள் தண்ணீர் கூட வழங்குவதில்லை! ஆனால் அனைவரும் ஹரே கிருஷ்ண மந்திர உச்சாடனத்தில் ஈடுபட்டால் அவர்களை மீண்டும் வரவழைக்க முடியும்!

எனவே இந்த கலி யுகத்தில் இறைவனின் திருநாமத்தை உச்சரிப்பது மட்டுமே ஒரே வழிமுறையாகும். ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாமைவ கேவலம் என்பதற்கான பொருள், இந்த யுகத்திற்கான வழிமுறையாக அனைவரும் பகவானின் நாமத்தை ஜபிக்க வேண்டும், ஆனால் அவர்கள் கிருஷ்ணரைத் தவிர வேறு கடவுளின் பெயரை உச்சரிக்க விரும்பினாலும், அதுவும் ஹரியின் அல்லது பரம புருஷரின்  பெயராகவே இருக்கும். ஈரானுக்குச் சென்ற போது, இஸ்லாமியப் பண்டிதர்கள் கூறிய அல்லாவும், அக்பரும் கூட பரபிரம்மனைக் குறிக்கும் பெயர்களேயாகும் என்று பிரபுபாதர் கூறுவார். எப்படியிருந்தாலும், தற்போதைய கலியுகத்திற்கான யக்ஞம் கிருஷ்ணரின் புனித நாமங்களை உச்சரிப்பதேயாகும். உலகின் பல்வேறு பகுதிகளில், தொற்றுநோய் இன்னும் தொடர்ந்துகொண்டுள்ளது. இதன்காரணமாக அனைவருமே பகவானின் புனித நாம உச்சாடனத்தில் ஈடுபடவேண்டும். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே! தற்போது நாம் சில கேள்விகளுக்குள் செல்வோம்.

பிரேமவதா கௌராங்கி தேவி தாஸி - வங்காளம்: குழந்தைகளை வளர்ப்பது பெண்களுக்கான மிக முக்கியமான கடமை என்று கூறினீர்கள். ஸ்ரீல பிரபுபாதரும்  இந்தக் கருத்தை வலியுறுத்தியுள்ளார். குழந்தை வளர்ப்பைத் தவிர, ஆன்மீக வாழ்வின் முன்னேற்றத்திற்காக அவள் வேறு என்ன மேற்கொள்ளவேண்டும் என்பதே எனது கேள்வி. அவள் வெளிப்புற சேவையை மேற்கொள்ள விரும்பினால், பக்தியை சிறப்புறச் செய்ய விரும்பினால், அவள் என்ன செய்ய வேண்டும்?

ஜெயபதாகா ஸ்வாமி: என்னுடைய ஜெயபதாகா சுவாமி app உங்களிடம் இருக்குமென நம்புகிறேன். அதில் நான் ஒரு பெண் என்பவள் என்னென்ன செய்ய முடியும் என்பதைப் பற்றிய தகவல் அதாவது வழிமுறைகளை நான் அனுப்பிவைக்கிறேன். பக்தித்தொண்டின் ஒன்பது வழிமுறைகளில், இந்த ஒவ்வொரு அங்கத்திலும் நீங்கள் சேவை செய்யக்கூடிய சுமார் 108 சேவைகள் உள்ளன. எனவே அதனை நான் உங்களுக்கு appல் அனுப்பிவைக்கிறேன். சில பெண்கள் மூளைச்சலவை பிரிவை மேற்கொண்டுள்ளனர்.

சாந்த கோபி தேவி தாஸி - தமிழ்: இந்த நாட்களில் பக்தர்களுக்கு கூட பெரும்பாலான குழந்தைகள் அறுவைசிகிச்சை மூலமே பிறக்கின்றனர். அறுவை சிகிச்சையின்போது, குழந்தையை வெளியே எடுக்கும் நேரத்தை அவர்கள் தங்களுடைய விருப்பம்போல் தீர்மானிக்கின்றனர்.  இதுபோன்றதான பிறப்பின் மூலமாக அவர்களால் எப்படி துல்லியமான ஜாதகத்தைப் பெற முடியும்?

ஜெயபதாகா சுவாமி: உண்மைதான், ஆனால் இதுபோன்றதான கேள்விகளுக்கு நீங்கள் ஒரு ஜோதிடரை அணுகலாம். அது பயனளிக்குமா என்று தெரியவில்லை. ஓரளவிற்கு, அது பயனளிக்கலாம்.

சிர்ஷா ஹரிப்ரியா தேவி தாசி: குழந்தைகளையும், வாலிப பருவத்தினரையும் எவ்வாறு கிருஷ்ண உணர்வில் விருப்பம்கொள்ளச் செய்வது என்பதை தயவு செய்து எனக்குத் தெரியப்படுத்துங்கள்.?

ஜெயபதாகா ஸ்வாமி: அதனால்தான் இதனை இளமையிலேயே தொடங்கிவிட வேண்டும் என்பதை நீங்களே பார்க்கலாம்! வாலிப பருவத்தினர் நண்பர்கள் மற்றும் பிற விஷயங்களின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளனர். நாம் குழந்தையுடன் நல்ல உறவை வளர்த்துக் கொண்டால், குழந்தை உங்கள் பேச்சைக் கேட்பதற்கான  வாய்ப்பு அதிகம். 8 வயதில், அவர்களை aspiring எடுக்கவைக்கலாம்.  11 வயதில் shelter எடுக்கவைக்கலாம். 12 வயதில், அவர்கள் தீட்சை பெற்றுவிடலாம்.  இவ்வாறாக அவர்கள் வாலிப பருவத்தை அடையும் முன்பே ஆன்மீகத்தில் நிலைபெற்றுவிடுகின்றனர். சிலசமயங்களில், வாலிப பருவத்தினரை கவர்வதற்காக,  நாம் சில மூளைச்சலவைகளையும் மேற்கொண்டாக வேண்டும். பக்தி மார்க சுவாமி, அவர்களை நாடகங்களில் ஈடுபடுத்துகிறார். இவ்வாறாக,  பெற்றோர்கள் தீவிரமான, மிகச்சிறந்த நல்ல பக்தர்களாக இருந்தால், நற்பலன் ஏற்படலாம். ஆனால் உங்கள் குழந்தைக்கு நல்ல நட்புறவு இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள். நான் அலச்சுவாவில் பார்த்தேன், அவர்கள் 24 பெண் குழந்தைகளுக்கு மிருதங்கம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தனர். இந்தியாவில் ஆண்கள்தான் மிருதங்கம் இசைப்பதைப் பார்க்கிறோம், ஆனால் மேலைநாடுகளில் பெண்களும் மிருதங்கம் இசைக்கின்றனர். தற்போது பகவத் கீதை வகுப்பு என்பதால், பக்தர்கள் காத்துள்ளனர்.

பக்தி விஜய பாகவத மஹாராஜர்: ஹரே கிருஷ்ண குரு மஹாராஜ்! தங்களுக்கு எனது மரியாதைக்குரிய வணக்கங்கள்!

ஜெயபதாகா ஸ்வாமி: ஹரே கிருஷ்ணா! எனது நல்ஆசிகள்.

பக்தி விஜய பாகவத மஹாராஜா: ஒரே ஒரு கேள்வி. பீஷ்ம பஞ்சகத்தை எப்படி கடைபிடிப்பது? நீங்கள் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

ஜெயபதாகா ஸ்வாமி: பீஷ்ம பஞ்சகா வரும் ஏகாதசியில் தொடங்குகிறது. இது பௌர்ணமி வரை தொடரும். பௌர்ணமியை பார்த்தபிறகு விரதத்தை முடிக்கவேண்டும். நான் சில சமயங்களில் கீதா பவனுக்கு வந்து, பக்தர்களுடன் இணைந்து பீஷ்ம பஞ்சகா இருந்துள்ளேன் என்று என் மருத்துவர் கூறுவார். ஹரி-பக்தி-விலாஸம் நாம் பீஷ்ம-பஞ்சகத்தை மேற்கொள்ள வேண்டும் என்று  பரிந்துரைக்கிறது. நாம் பீஷ்ம-பஞ்சகத்தை கடைபிடித்தால், எல்லையற்ற ஆன்மீக பலன்களை அடையலாம். பக்தர்கள் கங்கைக்குச் செல்வதால், பீஷ்மதேவர் கங்கையின் மகன் என்பதால், கங்கை நல்ஆசிகளை வழங்குகின்றாள். என்னால் கங்கைக்கு செல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் நான் கீதா பவனுக்குச் செல்வேன்.

சரி, மற்றவர்களையும் பார்ப்போம்!

- END OF TRANSCRIPTION -
Transcribed by கந்தர்விகா மோகினி தேவி தாசி
Verifyed by
Reviewed by

Lecture Suggetions